பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

கண்ணனைப் பற்றிய ஒரு காவியத் தொடர்



பூமித்தாய் பிரம்மனிடம் வேண்டுவது

லோகத்தின் ஓர் காலம்


இரத்தம் அருந்தும்
வேட்கையில்
சதைப் பிண்டமும்
காதல், காமம், ஆகிய
அறு சுவைகளையும்
உட்கொள்ளும்
கொடூர தேவர்கள்
உலாவிக் கொண்டிருந்த
கோரமான நேரம்.

பூமித்தாயிவள் இங்கே
எங்கனம் இருப்பாள்?

நச்சும் நாசமும்
விஷத் தெரிவின்
வாசனையும்
வீழ்த்த முடியா அசுரர்
வரங்களும்
வெந்து போன
வெறுப்புப் பாதையும்
நீசனின் கண்கொண்ட
சிவப்பு மலர்களும்
கத்தியும் கேடயமும்
ரத்தம் குடிக்கும்
கோப்ரா பாம்புகளும்
நித்தம் குடியிருக்கும்
ஈரலின் துர்நாற்றமும்

எப்படித் தாங்குவாள்
பூமித்தாய்?

கண்கள் ஏங்குகின்றன
ரணம் தாக்குகின்றன.
புற்களும் இறுக்கமாய்
புன்னகை மறந்தன.

கிளிகளின் மழலை
சாகடிக்கப் பட்டு
ஒளியிவள் ஓதல்
வதம் செய்யப் பட்டன,

மான்களின் காதல்
கொம்போடு ஒடிக்கப் பட்டு
தேனினும் இனிய தமிழ்
தேவையின்றி வீசப் பட்டன.

உலகெங்கும்
சடசட
படபட
கடகட

சக்தி வடிவினள்
ஆக்ரோசத்தையும்
அடக்கும்
புன்னகை பூத்த
வதனம் கொண்டனள்
இன்றோ
கண்ணீர் மல்குகிறாள்.

இவளின் பெருக்கில்
அலைகள் மீண்டும்
மோதுகின்றன சுனாமியாய்!
லாவக் குழம்புகள்
தணிந்து போய்
லோகமும் மழையாக
பொழிகிறது
சாபமிடாத சாபமிது.

அச்சமும் வேதனையும்
விழிகளில் தெரிக்க
அதரங்கள் வெடிப்புடன்
ரத்தமாய் துடிக்க,
ஓடுகிறாள் அன்னை
பிரம்மனிடம்.

ஓ! பிரம்மா!
நான் முகனோய்!
மூவுலகம் பெற்ற
ஆன்மாவின் மைந்தனே!
பார் புகழும் வேதத்தின்
இருப்பிடமே!
அன்றிலிருந்து
இன்று வரை
அனைவரையும்
அணைப்பவனே!

கண்களில்
கண்டாயா
கண்ணீரை?

பூலோகக்
கோலோச்சும்
புலையர்கள் சொல்கிறார்கள்
வேசியிவள் கூட்டமென்று!
பிரம்மா! நீ சொல்
தாசியவள் நானா?
தாயென்று சொன்னார்களே!

வாய் வந்ததெல்லாம்
சொல்லும் பருந்தரசர்கள்
குடல் தின்னும்
நோயர்கள்
இன்று என்
இதயத்தைக் கீறுகிறார்களே!
என்ன ஞாயம்?

உன் வேதப் புத்தகங்கள்
சொல்கிறதா?
எட்டு கண்களும்
சொல்கிறதா?
என் கண்களில் கோர்த்த
நீருக்கு பதில் சொல்!
காமத்தை மெல்லும்
கோரத்தைக் கொல்!

விழியிவள் வேதனை
நெஞ்சுக்கீறி
வெகுண்டு எழுந்திட்டான்
மூவருள் தேவனும்,
முனிவனும் போற்றும்
நான்முகன்...

எழுந்தவன்
விழுந்த துளிகளை
பொற்கரங்களால்
துடைத்திட்டான்

நாலுமுகத்திலிருந்தும்
நாலு வார்த்தை சொன்னான்

பூமித்தாயே!
நான் உனக்கு என்றும்
சேய்தான்!

திரேதா யுகம் இன்று
பிரேதா யுகம் ஆயினவோ?
உன் தேகத்தின் சோர்வு
உன் அதரத்தில் அறிந்தேன்
உன் பார்வையின் குருடு
உன் கூந்தலில் அறிந்தேன்
உன் உறுப்புக்களி ஊனம்
உன் அனலில் அறிந்தேன்

விண்மீனே நடுங்கி
விரல் சொடுக்க
அண்டங்களின் பூச்சொறிய
பாற்கடலில்
பள்ளி கொள்ளும்
விஷ்ணு இருக்க,
மேனிக் குருதியெல்லாம்
நினைவுகளோடு போய்விடும்!

என்றவன் பிரம்மன்,
பூமித் தாயோடு,
அழைத்தான் தேவர்கள்
அனைவரையும்!
அற்புதம் தரும்
அவனியவனைக் காண!

நாபிக் கமலத்தில்
மூவுலகும் அமைத்து
சேடன் மடியில்
நித்திரை ஆள்வான்

லட்சுமியிவன் காதலி
சேடன் இவன் மகன்
காதல் இவர்கள் குடும்பம்

பின் கதவருகே
பிரம்மா
பூமி
மற்றும் கோடி
தேவர்கள் கூட்டம்
விஷ்ணுவின் தரிசனத்திற்க்காக
கடல் அதிர காத்திருக்கிறார்கள்

முத்துக்கள் விழுந்திடுமோ
என நகையாது
இருப்பதில்லை இவன்
அனைத்தும் அறிகுவான்
அவனியில்
அவன்.

அழகனை
அழைப்பது என்ன சுளுவா?
புருச சுக்தமில்லாமல்
புருசன் எழுந்திடுவானா?
வீணை எழுப்பும் ஒலியில்
நாணமிழந்து ஓடும்
காதல் குமரனா இவன்?
வீணைக் கம்பிகளில்
இறுக்கமாய் அமர்ந்து
ஒவ்வொரு அசைவையும்
எடுத்துக் கொடுக்கும்
முழுமுதல் இசைதானே இவன்!!

தேவர் அனைவரும்
பாடினர் சுதி!
தேடி வந்து தீர்ப்பாரா
உலர்ந்து போய்
நிற்கும் பூமியின் கதி?

பிரும்மாவுக்குத் தெரியும்
பரம்பொருள் வெறும்
ஜடப் பொருளல்ல வென்று
எழுப்புதல் ஓர் உன்மத்தம்
அவன் எழுந்தால்
உலகமே உன்னதம்
ஆகையால், வெறும் பண்ணுக்கு
எழமாட்டான்
என்றறிந்தான் பிரம்மன்..

நால்முகன்
ஒருமுகமாய் தவமிருந்தான்
இது தவமெனச் சொல்லுவதா?
தியானம்;
புலனடக்கம்

சில நேரத்தில்
ஆயிரக்கணக்கான வேகத்தில்
சுற்றிக் கொண்டிருக்கும் கிரகங்கள்
நின்று போயின.
பறவைகளின் இறக்கைகள்
செயலிழந்து, அவை
கீழே விழுந்தன.
சந்திரன் தேயாமல் போனது

புருச சுக்ததில் எழா
புருசோத்தமன்
பிரும்மாவின் தியானத்தில்
நகைத்து, எழுந்தான்.

பிரம்மாவுக்கு குறுந்தகவல்
அனுப்பினான்
ஆயிரங் கலையும்
ஆயிரங்களையும்
அறிந்த
அப்பழுக்கில்லாதவன்

இதுவே வேதமுறை.
வேதம் இங்கேயே
முழுவதுமாய்
மொண்டு எடுக்கப்படுகிறது.
முழுமுதற்கடவுளின்
இதயத்தில் புதிதுபுதிதாய்
தோன்றும் குருதிபோல
வேத அறிவுகள்
பொங்கிக் கொண்டே இருக்கும்.

பிரம்மா தியானத்தில்
அறிந்த வேதச் செய்தி
தேவர்களுக்கு வழங்கப்பட்டது..

காற்றில் கூட
பரந்தாமன் வார்த்தைகள்
மொழிபெயர்க்கபடும்போது
எவ்வளவு இனிமை?
முத்துக்களைப் போல
வான வெடிகளும்
கிரகங்களின்
குதூகல ஆட்டங்களும்
நஷத்திரத்தின் தேவ கானங்களும்
காணமுடிந்தது,

பிரம்மாவினால் வழங்கப்பட்ட
பரந்தாமன் செய்தி என்ன?

பிரம்மன் சொல்கிறான்
" தேவர்களே!
தேவிகளே!
தண்ணொளி சுடரே!
விண்ணொளி விளக்கே!
யாவரும் கேளீர்!

ஆதி முதல் நாமனைவரும்
தேவனின் பாதங்களை அறிவோம்
மலராத மொட்டுக்களின்
வாசனையும்
அதை சுற்றி சுற்றியே வரும்
வண்டுகளின் ஒலியும்
கண்டு, கேட்டு இருக்கிறோம்
நாய்க்குலங்கள் பல
நமக்குத் தோன்றி
இன்னலின் துன்பம்
இப்பூமியன்னை
பெற்றதறிவீர்

புருஷோத்தமன்
அனைத்தும் அறிந்தவன்
ஆயுள் கடந்தவன்
இன்னும் சிறிது காலத்தில்
இப்பூமியின் மடியில்
பிறப்பான்
உன்னத சக்திகளோடு!
இன்னலினி பெற்றவன்
இறப்பான்
உன்னத முக்திகளோடு!

தேவர்களே கேளுங்கள்!
யாவரும் செல்லுங்கள்!
யது குலத்திலே பிறந்து
யெம் முழுமுதலானுக்கு
உதவுங்கள்"

பிரம்மனின் வார்த்தைகள்
ரூபமில்லா லோகத்தில்
கொண்டு சென்றது
தேவர்களின் நினைவுகளை...

தொடரும்.....

கொய்தது பிச்சி @ 2:37 AM, ,




முதலில்.........

வணக்கம்.

நெடுநாட்களாய் என் நெஞ்சில் குழல் ஊதிக் கொண்டிருக்கும் என் காதலன் முகவரியை ஆங்காங்கே இதயத்தின் மேற்புறத்தில் எழுதிவைத்திருந்தேன். ஆரம்பம் முதல் முடிவு வரை அவனைச் சித்திரமாய் வடிக்க, என்னுள் நேர்ந்த வெட்கத்தையும் நீக்கிவிட்டு இங்கு எழுத விழைந்துள்ளேன். என்னவன் கண்ணனவன் வரலாற்றில் ஆங்காங்கே தவறுகள் நேர்ந்தால் குட்டுங்கள். மறக்காமல் இந்த திரியையும் அவ்வப்போது தட்டுங்கள்.

எனது நன்றி :
காதலன் கண்ணனுக்கும், இங்குள்ள மன்ற உறவுகளுக்கும். அதிமுக்கியமாக என்னவன் பற்றி எனக்கு முழுவதுமாய் வடித்துக் கொடுத்த எண்ணற்ற புத்தகங்களுக்கும்

என் காதல் குழைந்த இதய நன்றிகள்.............


கொய்தது பிச்சி @ 8:32 PM, ,